காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை மின்வாரிய அலுவலகத்தின் வெளியே அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை விஷமிகள் சிலர் அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்துவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட அமைப்பாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த நபரை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலை மீது போடப்பட்ட காவி துண்டை காவல் துறை அகற்றிவிட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: