×

சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாயக் கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசித்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகர் பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் தற்போது சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்களது இல்ல சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில் மேற்கொள்ள, கடந்த 2002ம் ஆண்டு திமுக ஆட்சியில் சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. இதுதவிர, அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் இந்த சமுதாய கூடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து குறைந்த அளவு தொகை வசூலிக்கப்பட்டு, ஊராட்சி கணக்கில் சேர்ப்பதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில், இந்த சமுதாய கூடம் கடந்த ஆட்சியில் முறையாக பராமரிக்கப்படாததால்  நிகழ்ச்சிகள் நடத்த இயலாத நிலையில் சிதிலமடைந்துள்ளது.

மின்விசிறி, விளக்குகள் இல்லை. கட்டிடம் பலமிழந்திருப்பதால், மதுபிரியர்களின் கூடாரமாகவும், கால்நடைகளைக் கட்டும் இடமாகவும் உள்ளது. மேலும், சீட்டாடுதல், இரவு நேரங்களில் பாலியல் தொழில் நடைபெறும் இடமாகவும் இந்த சமுதாயக் கூடம் மாறிவருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் பலரும், தங்களின் வீட்டு விசேஷங்களை குறைந்த வாடகையில், இந்த சமுதாயக்கூடத்தில் தான் நடத்தி வந்தனர். தற்போது சமுதாயக்கூடம் சிதிலமடைந்துள்ளதால் தனியார் மண்டபங்களில் அதிக பணம் செலுத்தி விசேஷங்களை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், புனரமைப்பு செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sirukaveripakkam ,Jeje ,
× RELATED புதிய திட்டப்பணிக்கு பூமி பூஜை