திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் நகராட்சியில் நீண்ட காலமாக வரி மற்றும் வரியில்லா இனங்கள் செலுத்தாமல் ரூ.8 கோடி நிலுவையில் உள்ளது. இதனால் நிலுவைதார்களுக்கு நோட்டிஸ் வழங்குதல், நிறுவனங்களுக்கு சீல் வைத்தல் மற்றும் ஜப்தி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி குத்தகை நிலுவை வைத்துள்ள 450 நபர்களுக்கு லோக் அதாலத் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி குமணன், வழக்குறிஞர் உதய சந்திரன், நகராட்சி மேலாளர் கருமாரியப்பன், நகராட்சி வருவாய் அலுவலர் ராமு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த லோக் அதாலத்தில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை நிலுவைத் தொகை தாரர்கள் என 43 பேர் நீதிமன்றத்தில் நேரடியாக கலந்து கொண்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினர். அதேபோல் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகளை ஆணைக் குழு இணைந்து கல்விக் கடன், விவசாயக் கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவற்றை வாங்கி செலுத்தாதவர்களுக்கு தீர்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றத்தில் 350 நபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி டேனியேல் ஹரிதாஸ், வங்கி மேலாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த லோக் அதாலத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரூ.38 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. இதில் நேற்று 12 லட்சத்து 70 ஆயிரத்தை நேரடியாகவும் மீதமுள்ள பணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தருவதாகவும் ஒப்புக்கொண்டதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Related Stories: