மீஞ்சூர் அருகே கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையை ஊரின் பொது இடத்தில் வைக்க பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், தேவதானம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளகுளம், குமர சிறுலபாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழமையானதால் அரசு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது மீண்டும் அதே பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பழங்கால பகவான் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.  ஊராட்சி மன்ற தலைவர், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் இந்த புத்தர் சிலை பொன்னேரி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்ட பள்ளி வளாகத்திலோ அல்லது ஊர் பொது இடத்தில் உள்ள அரச மரத்தடியிலேயோ நிறுவ வேண்டும் என்றும் இல்லையேல் பௌத்த பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அந்த கிராமத்தில் உள்ள பௌத்தர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த புத்தர் சிலையை தொல்லியல் துறையில் ஒப்படைக்க கூடாது. அவ்வாறு ஒப்படைக்கும் பட்சத்தில் பௌத்தர்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கும். மேலும் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பௌத்த சின்னங்கள் இருக்க வாய்ப்புள்ளதால் அகழாய்வு செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதித்தமிழர் விடுதலை இயக்க மாநில நிதி செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட பௌத்த சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பிஞ்சிவாக்கம் நாளந்தா புத்த விகாரின் தலைவருமான அம்பேத் ஆனந்த் ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர்.

இந்த  நிகழ்ச்சியில் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்க பேரவையின் பரிபாலன மகா செயலாளர் அறவணடிகள் புத்தபிரகாசம், மாவட்ட சிறுபான்மை பிரிவு உறுப்பினர்கள் காஞ்சிபுரம் திருநாவுக்கரசு, விழுப்புரம் மங்கலம் புத்த விகார்  தலைவர் வழக்கறிஞர் போதிசந்திரன், பல்லூர் புத்தவிகார் நிர்வாகி கோ.வி.பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினரும், விசிக மாநிலச் செயலாளருமான நீலவானத்து சந்திரன், தளபதி சுந்தர், தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பகுஜன்பிரேம், பூவை எம்.ஜெய்பீம் செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: