கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை திருட்டு

செய்துங்கநல்லூர், ஆக. 12: கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை, திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில், பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பூசாரி முத்துக்கிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு கோயிலை அடைத்து சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது கோயிலின் உள்ளே இருந்த மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோயிலில் மூலவருக்கு முன்புறமிருந்த ஒன்றரை அடி உயரம், 30 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன உற்சவர் ஐயப்பன் சிலை கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 10 செமீ உயரமுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை, அருகில் இருந்த அறையில் வெண்கலத்தில் ஆன திருவாச்சி உள்ளிட்ட சில பொருட்களும் திருடு போயிருந்தது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வைகுண்டம் டிஎஸ்பி மாயவன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.  அப்போது கோயில் சுற்றுச்சுவர் அருகே சுமார் 10 செமீ உயரமுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது. கோயிலில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் தப்பிச் செல்லும்போது ஆஞ்சநேயர் சிலை கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளை போன ஐம்பொன் ஐயப்பன் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். போலீசார் வழக்கு பதிந்து துணிகர கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: