முத்துப்பேட்டை நகரில் சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது

முத்துப்பேட்டை,ஆக.12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடைசி ஆலங்காடு வள்ளுவர் சிலை முதல் முத்துப்பேட்டை நகர் பகுதியான திருத்துறைப்பூண்டி சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக நீயூ பஜார் சென்று பட்டுக்கோட்டை சாலை கொய்யா முக்கம் வரையிலான சாலை அமைத்து பல வருடங்கள் ஆனது. அதனால் சாலை நெடுவெங்கும் பல இடங்களில் சேதமாகி இருந்தது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் சுற்று பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூருக்கு செல்லும் வாகனங்களும் சரியாக நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் இப்பகுதி மக்கள் இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து சாலை இருபுறமும் மணல் அப்புறப்படுத்தி இந்த தார்சாலை அமைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் குறிப்பாக கருமாரியம்மன் கோவில் அருகே சாலையின் குறுக்கே செல்லும் வடிகால் பாலமும் சேதமாகி பலவினமாக இருந்ததால் அந்த பாலத்தையும் இடித்துவிட்டு புதியதாக பாலம் கட்டும் பணிகளும் முழுவீச்சில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் முத்துப்பேட்டை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: