சுதந்திர தின அமுத பெருவிழா தலைமை ஆசிரியர், அலுவலக பணியாளர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்; கரூர் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

கரூர், ஆக. 11: சுதந்திர அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 13ம்தேதி முதல் 15ம்தேதி வரை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி புகைப்படம் எடுத்து அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வீடுகளில், தலைமைச் செயலாளர், ஆட்சியர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆகஸ்ட் 13ம்தேதி முதல் 15ம்தேதி வரை தேசிய கொடியை ஏற்றி அதனை புகைப்படமாக எடுத்து, அந்த நகலை, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசிய கொடியை ரூ. 50 கட்டணம் செலுத்தி, முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று முதல் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தலைமையாசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேசிய கொடியை பெற்றுச் சென்று வருகின்றனர். மேலும், வீடுகளில் ஆகஸ்ட் 11ம்தேதி முதல 17ம்தேதி வரை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், கட்டாயம் ஆகஸ்ட் 13ம்தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பது அவசியம் என்பதால் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 4 ஆயிரம் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: