2814 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு ரூ.25 ஆயிரம் இரு சக்கர வாகன மானியம்

நெல்லை, ஆக. 10: தமிழகத்தில் 2814 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.  

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட  2814 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு அரசாணையின் படி  வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ஒரு நபருக்கு ஒரு வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்தத் தொகையை வழங்க ஒப்புதல் அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களுக்கு மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட வக்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்கப்படும்.

 இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டரை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பினராகவும், மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு கூறியிருப்பதாவது: கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் மானியத் தொகை மின்னனு பரிமாற்றம் மூலம் வழங்கப்படும். தேவைப்படும் நிலையில் மானியத் தொகையை சம்பந்தப்பட்ட வாகன முகவருக்கும் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் என்ஜின் கொள்ளளவு 125 சிசி-க்கு மிகாமல் இருப்பதுடன், வாகனம் 01.01.2020-க்கு பின்னர் தயார் செய்யப்பட்டதாக இருக்க  வேண்டும். இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர்லெஸ் அல்லது ஆட்டோ கியர் உடன் கூடிய வாகனமாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தமிழகத்தில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

தமிழகத்தைச் சார்ந்தவராக இருப்பதுடன், 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்  மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக  இருந்தால் அதற்குரிய சான்று, சாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு எண் புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.  மேலும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கீழ் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். 30 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: