×

உலக நன்மை வேண்டி நெல்லையப்பர் கோயிலில் இன்று பவித்ர உற்சவம்

ெநல்லை,ஆக.10: நெல்லையப்பர் கோயிலில் உலக நன்மை வேண்டி பவித்ர உற்சவம் சிறப்பு வழிபாடு இன்று காலையில் நடக்கிறது. உலக மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்ந்திட வேண்டி கோயில்களில் பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளில் அறிந்தோ, அறியாமலோ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அவ்வித குறைபாடுகளை நீங்கி ஒரு ஆண்டு நடத்தப்பட்ட பூஜைகளில் சம்பூர்ணமான பலன் கிடைத்து இம்மை மறுமை பயன்களை மக்கள் அடைய வேண்டும்.  பூஜை குறைபாடுகளை நீக்க வேண்டி கோயில்களில் நடத்தப்படுவது பவித்ர உற்சவமாகும். இதில் பட்டு, பருத்தி நூலில் செய்யப்பட்ட மாலைகளுக்கு பவித்ரம் என்று பெயர். அதாவது புனிதமானது என்று பொருள் பூஜை குறைபாட்டினால் ஏற்படும் பாவத்தில் இருந்து தடுத்து நிறைவு செய்வது புனிதமாக்குவது பவித்ர உற்சவமாகும்.

நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்ேவறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டி (10ம்தேதி) இன்று காலை 8 மணிக்கு மூல மகாலிங்கம், நெல்லையப்பர். காந்திமதிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதில் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரமான பூணுல் மாற்றும் வைபவம் நடக்கிறது. காலை 11 மணிக்கு விநாயகர், முருகர், உற்சவர் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. உற்சவருக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதவீதி வலம் நடக்கிறது. இரவு பள்ளியறை பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Pavitra ,Nellayapar temple ,
× RELATED வீடு புகுந்து மனைவி, மாமனாரை படுகொலை செய்த வாலிபர் கைது