×

செப்.7ல் ராகுல்காந்தி குமரியிலிருந்து காஷ்மீரூக்கு நடைபயணம் 2024ல் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் நெல்லையில் காங். மாநில தலைவர் அழகிரி பேட்டி

நெல்லை, ஆக.10: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப். 7ம்தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை துவங்கும் நடைபயணம் 2024ல் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என  நெல்லையில் காங்கிரஸ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையிலும், விலைவாசி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை முன்வைத்து நடைபயணம் தொடங்கியுள்ளோம். இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்ததில் காங்கிரசுக்கும், பொது உடைமை கட்சிகளுக்கும் பங்கு உண்டு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதுகச்சா எண்ணெய் விலை 120 டாலராக இருந்தது. பெட்ரோல் லிட்டர் ரூ.70க்கு விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் 80 டாலராக உள்ள நிலையில் மோடி அரசு ரூ.100 மேல் பெட்ரோல் விற்கப்படுகிறது.

காங்கிரசுக்கு ஆளத்தெரியும், பாஜவுக்கு பேசத்தான் தெரியும். பீகாரில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருப்பதால் பிரிந்த நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள், மகாராஷ்டிரா போன்ற சூழல் பீகாரில் ஏற்படாது.
மதசார்பற்ற கட்சிகளுக்கு பீகார் அரசியல் மாற்றம் முதல் வெற்றி. கவர்னர் ரவி, தனது மாளிகையில் வரம்பு மீறி மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்துகிறார். இது தவறான செயல் கண்டிக்கத்தக்கது. புலனாய்வுதுறை பின்புலம் உள்ள கவர்னர் தமிழகத்திற்கு தேவையில்லை. மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்கட்டண உயர்வுக்கு காரணம் ஒன்றிய அரசின் உதய்திட்டம்தான்.
 
 மேலும் அவர் கூறிகையில், வரும் செப். 7ம்தேதி தேர்தல் வெற்றியை மட்டும் முன்னிறுத்தாமல் இந்திய ஜனநாயகத்தை சீர்திருத்தும் வகையில், பாஜ அரசை எதிர்க்கும் நோக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை துவக்கி காஷ்மீர் வரை செல்கிறார். 148 நாட்கள் 3,500 கி.மீ தூரம் 12 மாநிலங்கள் வழியாக செல்கிறார். இது 2024ல் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என தெரிவித்தார். பேட்டியின் போது தேர்தல் பொறுப்பாளர் வல்லப்பிரசாத், எம்.பி.க்கள் ஜோதிமணி, ஜெயகுமார், எம்.எல்.ஏ., ரூபிமனோகரன், முன்னாள் மத்திய  அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொது செயலாளர் சொக்கலிங்ககுமார், மாவட்ட தலைவர்கள் ஐயப்பன், கெங்கராஜ், துணை தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்  உடனிருந்தனர்.
முன்னதாக நெல்லை கொக்கிரகுளம் காங்கிரஸ் அலுவலகத்தில் ஜோதிமணி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Tags : Rahul Gandhi ,Kumari ,Kashmir ,2024 parliamentary elections ,Nellai Congress ,State ,President ,Alagiri ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...