கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து கட்டிய சுவரை இடிக்கும் பணி துவக்கம்

கொடைக்கானல், ஆக. 10: கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து கட்டிய சுவரை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தூண் பாறை உள்ளது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தூண் பாறையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த தூண் பாறையினை வாகனங்களில் செல்லும் போது கண்டு ரசிக்கும் வகையில் எந்த ஒரு சுவாரோ, மறைவோ இல்லாத நிலை இருந்தது. மேகமூட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லாமல் சென்று விடுவார்கள். மேகமூட்டம் இல்லாத நிலையில் இப்பகுதியில் இறங்கி உள்ளே சென்று தூண் பாறையின் இயற்கை அழகை ரசித்து செல்வார்கள்.

இந்நிலையில் தூண் பாறையினை முற்றிலுமாக மறைக்கும் விதமாக திடீரென வனத்துறையினர் 22 அடி சுவரை எழுப்பினர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் முகப்பு பகுதியில் இருந்து தூண் பாறையின் அழகினை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். மேலும் தூண் பாறையை மறைத்து எழுப்பப்பட்ட சுவற்றை அகற்ற வேண்டும் என கொடைக்கானல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் இதுபற்றி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் திலீப்பிடம் கேட்ட ேபாது, ‘இந்த சுவர் செல்பி பாயிண்ட் ஆக அமையுள்ளது. அழகிய யானை உருவங்கள் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த சுவர் அமைக்கப்படும்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இந்த சுவர் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட 22 அடி உயரம் உள்ள கான்கிரீட் சுவர் மீண்டும் இடிக்கப்படுவது பண இழப்பை ஏற்படுத்துவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் விஜயன் கூறியதாவது, ‘தூண் பாறையை மறைத்து எழுப்பிய சுவர், உயரம் குறைப்பதற்காக இடிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வனத்துறை சார்பில் அமைக்கப்பட இருந்த யானை உருவ டிசைன்கள் மாற்றி அமைப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து உள்ளனர்’ என்றார்.

Related Stories: