×

காரைக்குடியில் ஆக.14ல் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்


சிவகங்கை, ஆக.10: காரைக்குடியில் ஆக.14அன்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் போதைப் பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் தொடர்பான முன்னோடி கூட்டம் நடந்தது. மாவட்ட எஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தலைமை வகித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியதாவது:17.8.2022 வரை போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. நாளை அனைத்து கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்கும் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, ஆக.12, சிவகங்கை மன்னர் துரைச் சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், ஆக.14, காரைக்குடியில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன.

இளைஞர்கள் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் தவறான பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களையும், அறியாமையால் செய்கின்றனர். பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளின் நடவடிக்கை, கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் ஏதேனும் போதை பொருள் விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை கல்வி நிலையங்களில் கற்றுத்தர வேண்டும்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தி சீரான வழியில் கொண்டு சென்று நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரின் பங்கும் உள்ளது. இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் உதவி ஆணையாளர் கண்ணகி, துணை இயக்குநர் ராம்கணேஷ், நேரு இளைஞர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரவின் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Drug Prevention Awareness Marathon ,Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க