போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு

ஊட்டி, ஆக. 10:  போதை  பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாள் அனுசரிப்பது தொடர்பாக, அனைத்து  அரசுத்துறை  அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட  கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்  தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், போதை பொருட்களின்  நடமாட்டத்தையும், பயன்பாட்டினையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என  அறிவுறுத்தி உள்ளார். விளையும் பயிர்களை நாசம் செய்யும் களையாக சமூகத்தில் முளைத்து விட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடு  களையெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.  

அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான  விழிப்புணர்வு நாள் அனுசரிப்பது தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்  கூட்டம் நடைபெறுகிறது. மேலும், துறை அலுவலர்கள் போதை பொருள்  பயன்பாட்டின் ஆபத்து குறித்து பள்ளிக்கல்லூரி மாணவ, மாணவிகளிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி  அருகில் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளனவா? என்பது குறித்து  ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இது தொடர்பான பழக்கங்கள் ஏதேனும்  உள்ளதா? என போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 தற்செயலாகவோ, தவறுதலாகவோ போதை பொருட்களை பயன்படுத்துவன் மூலம் முழுமையாக  அடிமையாகி எதிர்காலம் பாழாகி குடும்பமும் அழிந்து விடும் என்பதை நாம்  அறிவோம். நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாகவும், குறைந்த அளவு மக்கள்  தொகை கொண்ட மாவட்டமாகவும் உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,  இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் துறை  அலுவலர்கள் திட்டமிட்டு, போதை பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு  பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி)  சச்சின் போஸ்லே துக்காராம், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் மனோகரி, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) பழனிசாமி, துணை  இயக்குநர் (சுகாதாரத்துறை) பாலுசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஷோபனா உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: