மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, ஆக.10:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழை தொடருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை மூன்று மாதங்கள்  பெய்யும். இம்முறை கடந்த மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது சற்று தீவிரமடைந்து நாள் தோறும் பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு ஊட்டி - கூடலூர் சாலை, ஊட்டி - மஞ்சூர் சாலை, புதுமந்து சாலை, மரவியல் பூங்கா சாலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனினும், இவைகளை தீயணைப்புத்துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உடனுக்குடன் அகற்றப்படுவதால் பெரியளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று அதிகாலை ஊட்டியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் எடக்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது. முத்தோரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் சேதம் அடைந்தது.

எமரால்டு அருகே லாரன்ஸ் பகுதியில் விவசாய நிலத்தில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. விவசாய நிலம் என்பதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளிலும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இவைகளை உடனுக்குடன் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருவதால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. மேலும், சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களையும் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மண் சரிவு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

 பல இடங்களில் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுவதால், ஏராளமான கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. சாலையோரங்களில் உள்ள மரங்கள் வாகனங்களின் மீது விழும் நிலையில், பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். நேற்று முன்தினம் கூடலூரில் மரம் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார்.

நீலகிரியில் கடந்த இரு மாதங்களாக பெய்து வரும் மழைக்கு இது வரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மின் உற்பத்திக்கு பயன்படும் அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி அணைகள் நிரம்பின. இது தவிர, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், குந்தா, பில்லூர் உட்பட சில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காற்றுடன் மழை பெய்து வருவதால், குளிர் அதிகரித்துள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மழை மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அறைகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். மழை மற்றும் குளிரால், உள்ளூர் மக்களும் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. நீலகிரியில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: ஊட்டி 44, நடுவட்டம் 45, கல்லட்டி 3, கிளன்மார்கன் 76, குந்தா 58, அவலாஞ்சி 193, எமரால்டு 67, கெத்தை 2, கிண்ணக்கொரை 3.5, அப்பர்பவானி 220, கேத்தி 8, கூடலூர் 166, தேவாலா 77, பந்தலூர் 93. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 1363 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 47.00 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 15 டிகிரிம், செல்சியசும், குறைந்தபட்சம் 11 டிகிரிம் பதிவாகியிருந்தது.

Related Stories: