மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு

கோவை, ஆக. 10:  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மக்களின் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணை கேரளாவில் இருந்தாலும், தண்ணீர் எடுக்கும் உரிமை தமிழகத்துக்கும், அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவிடமும் உள்ளது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரம் 36 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தற்போது 43 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில், 17.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அணையில் இருந்து 10 கோடியே 70 லட்சத்து 14 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

 இதேபோல், மழை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் அணையின் முழு கொள்ளவான 45 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 45 அடியை கடந்தால் தான் அணையில் இருந்து கேரள அரசு தண்ணீரை திறந்து விடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டியுள்ள ஆறு, குளங்கள், ஓடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணையில் இருந்து வினாடிக்கு 1,485 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்னமநல்லூர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

நொய்யல் ஆற்றின் குறுக்கே மத்துவராயபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 30 அடி பாலம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளப்பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், நேற்று முன்தினம் மாவட்டத்தில் 527.20மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, சின்கோனா 95மி.மீ, சின்னகல்லாறு 114மி.மீ, வால்பாறை 85மி.மீ, வால்பாறை தாலுகா 82மி.மீ, சோலையாறு 119மி.மீ, ஆழியார் 5.60மி.மீ, பொள்ளாச்சி 19மி.மீ, கோவை தெற்கு 3மி.மீ, கோவை விமானநிலையம் 0.60மி.மீ, வேளாண் பல்கலைக்கழகம் 4மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: