வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்

கோவை, ஆக.10:  கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை மக்கள் அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன.

அதன்பின், நிர்வாக காரணங்களுக்காக 32 நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்கான பணிகள் துவங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போது 6 நுண்ணுயிர் மையங்கள் பணிகள் நிறைவடைந்து நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இந்த மையங்களுக்காக குப்பைகளை வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வாங்க 105 டாடா ஏஸ் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. அதில் பச்சை நிறம், நீல நிறம் என குப்பைகளை பிரித்து வாங்க வாகனத்தின் உட்கட்டமைப்பு வசதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதில், பச்சை நிறத்தில் மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள் போன்றவற்றை வாங்கவும், நீல நிறத்தில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள் போன்றவற்றை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் குப்பைகளை எடுத்து கொண்டு நுண்ணுயிர் மையங்களுக்கு செல்லும். இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதனால், இனி வரும் காலங்களில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் சேர்வது தடுக்கப்படும்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 32 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் தற்போது 6 மையங்கள் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன.  மீதமுள்ள மையங்களில் அவற்றின் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் நமது மாநகராட்சிக்கு ரூ.70 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. இந்நிதியில் 105 டாடா ஏஸ் மினி வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. மேலும், 200 டாடா ஏஸ் வாகனங்கள் மற்றும் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் மையங்கள் போன்றவற்றிக்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள ரூ.5 கோடி நிதியில் பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், பூங்காக்கள் சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில்,``வெள்ளலூர் கிடங்கில் குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது. அதாவது, சுமார் 40 டன் வரை அழிக்கப்படுகிறது. தற்போது, 16 ஏக்கர் அளவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளது. குப்பைகள் அழிக்கப்பட்டுள்ள இடத்தில் மியா வாக்கி முறையில் மரகன்று நட உள்ளன. விரைவில் குப்பைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்’’ என்றார்.

Related Stories: