பாசன பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் சத்தியில் மலைப்பகுதியில் வீணாகும் தண்ணீர் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு, ஆக.10: சத்தி அருகே மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வசதியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் அடுத்த குத்தியாலத்தூர் ஊராட்சி கம்பத்தராயன் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், சூரிப்பள்ளம் வழியாக பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் புளியங்கோம்பை பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, 3 முறை ஆய்வு நடத்தியும் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பியும் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் புளியம்கோம்பை, ஒட்ட குட்டை, பாசக்குட்டை, கம்பத்திராயன்மலை, கொண்டையம்பாளையம், பளிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மேலும் கூறுகையில், புளியங்கோம்பை அணைகட்டு திட்டம் என்பது 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனை நிறைவேற்ற 3 முறை திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மட்டுமல்லாது வனவிலங்குகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்க முடியும். இதேபோல மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி ஆற்றில் கலந்து கடலில் சென்று சேர்ந்து வருகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: