குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

ஈரோடு, ஆக.10: ஈரோடு மாநகராட்சியில் குடியிருப்பு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு, விவேகானந்தா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள காலியிடத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மழைநீர் குளம் போல தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நிற்பதால் பாசி படர்ந்து காணப்படுகின்றது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடுமையாக குற்றம் சாட்டினர்.

Related Stories: