கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

மேச்சேரி, ஆக.10: தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி, பக்தர்கள் தீர்த்த குடமெடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று தீமிதித்தல் நடக்கிறது. தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். சுற்றுப்புற பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் கண்ணனூர் மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தால் கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால், சுற்று வட்டாரம் மட்டுமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களும் திரண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

தற்போது, கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று(10ம் தேதி) புதன்கிழமை அதி காலையில் தீ மிதித்தல், மா விளக்கு ஊர்வலம் நடக்கிறது. மாலை  அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அம்மன் வீதி உலா மற்றும் அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

Related Stories: