மாயமான பட்டதாரி பெண்ணை மீட்கக்கோரி முற்றுகை போராட்டம்

பள்ளிபாளையம், ஆக.10: பள்ளிபாளையம் அருகே மாயமான பெண் தொழிலாளியை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தனியார் நூற்பாலையை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகள் முத்துலட்சுமி(22). கல்லூரியில் படித்த இவரை, வளாகத்தேர்வு மூலம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படையில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை, வேலைக்கு தேர்வு செய்தது. மூன்று வருடங்களாக இவர் ஆலையில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஆலையில் இருந்து முத்துலட்சுமி திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்து அவரது தந்தை பாலமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வெப்படைக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், ஆலையில் இருந்து பெண் தொழிலாளி மாயமான விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து நாமக்கல் மாவட்ட சிஐடியூ பஞ்சாலை தொழிற்சங்கம் சார்பில் நூற்பாலை வாயிலை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார், முத்துலட்சுமி மாயமான விவகாரம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் மீட்டு விடுவதாகவும் உறுதியளித்தனர். இதன்பேரில், தொழிற்சங்கத்தினர் முற்றுகையை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: