அஞ்செட்டி அரசு பள்ளியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

தேன்கனிக்கோட்டை, ஆக.10: மாணவர்கள் வருகை சரிவு எதிரொலியாக அஞ்செட்டி அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் ேசர்ந்த சுமார் 1600 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பள்ளிக்கு மாணவர்கள் வருகை சரிந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரிதிநிதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பள்ளியின் சார்பாக சில குழு அமைத்து, பள்ளிக்கு வராத மாணவர்களின் கிராமத்திற்கு நேரடியாக சென்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மாணவர்கள் பள்ளிப்படிப்பை தொடருவதை உறுதி செய்வது, தாங்கள் மேற்கொண்ட முயற்ச்சியை, மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களில் அதிகமாக 11 மற்றும் 12ம் வகுப்புகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் 6 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு இடைப்பட்ட சில மாணவர்களும் வழக்கமாக விடுப்பில் உள்ளனர். அஞ்செட்டியை சுற்றியுள்ள 40கி.மீ தொலைவில் உள்ள தொட்ட மஞ்சு, மஞ்சுகொண்டப்பள்ளி, நாடராம்பாளையம் மற்றும் தேவன்தொட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. மலைப்பகுதிகளில் வசிப்பதால் பள்ளிக்கு செல்வதில் சில சிரமங்கள் ஏற்படக்கூடும். அவர்கள் தொடர்ந்து வராமல் இருப்பதற்கான காரணங்களை கண்டறிய முயற்சித்து வருவதாகவும், மாணவர்களின் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: