×

உடுமலைப்பேட்டையில் அணை திறப்பு கரூர் மாவட்டம் வழியாக திருமுக்கூடலூர் நோக்கி செல்லும் அமராவதி தண்ணீர்

கரூர், ஆக. 10: கரூர் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கரூர் மாவட்டத்தின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றில் திருமுக்கூடலூரைச் நோக்கிச் செல்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்கள் பாசன வசதிகளை பெற்று வருகிறது. தற்போது, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறை வழியாக கரூர் நோக்கி வருகிறது.

இடையில், பெரியாண்டாங்கோயில் அருகே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணை வளாகத்தை சுற்றிலும் அமராவதி ஆற்றுத்தண்ணீர் கடல் போல பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் நகரின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆறு, கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றுடன் கலந்து திருச்சி நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு 7550 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 7473 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Udumalaipadu ,Karur ,Trimumudalur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்