கரூர் ராமகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், ஆக. 10: கரூர் ராமகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம்கரூர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வப்போது பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் வகையில், பணியாளர்கள், சாக்கடை மூடியை திறந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதிச் சாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஒரே சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணபுரம் பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன. இந்நிலையில், பாதாள சாக்கடை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் வேன் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் தற்போது செல்ல முடியாமல் மாற்று வழியில் சென்று வருகிறது. இரண்டு சக்கர வாகன போக்குவரத்து மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து சீரான முறையில் போக்குவரத்து நடைபெறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: