அரசு அறிவித்தபடி திருப்பூர் போலீசாருக்கு வார விடுமுறை கிடைக்குமா?

திருப்பூர், ஆக.9: திருப்பூர் பனியன் தொழில்கள் அதிகம் நடைபெறும் மாவட்டமாக உள்ளது. பனியன் தொழில் என்றால் அதனை ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட முடியாது. பனியன் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழில்கள் நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல், விவசாயம், கைத்தறி, ஹோட்டல்கள், குடிசைத்தொழில்கள், தேங்காய் களம், அரிசி ஆலைகள், எண்ணெய் செக்குகள் உள்ளிட்ட ஏராளமான தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்களில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் என்று அனைத்து தரப்பினராலும் புகழ் பெற்று விளங்குகிறது. மேலும், குட்டி ஜப்பான், டாலர் சிட்டி என்று ஏராளமான பெயர்களால் திருப்பூர் புகழ்பெற்று வருகிறது. இப்படி புகழ் பெற்று விளங்கும் திருப்பூரில் குற்றங்களும் குறைந்தபாடில்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி என தினமும் ஏதாவது வகையில் குற்றங்கள் அரங்கேறுகிறது. இதனை தடுப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.

 திருப்பூரில் மாநகரிால் மட்டும் 4 சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கொங்கு நகர் சரகத்திற்கு உட்பட்டு வடக்கு, வேலம்பாளையம் காவல் நிலையங்களும், அனுப்பர்பாளையம் சரகத்திற்கு உட்பட்டு அனுப்பர்பாளையம், திருமுருகன் பூண்டி போலீஸ் நிலையங்களும், நல்லூர் சரகத்திற்கு உட்பட்டு நல்லூர், வீரபாண்டி போலீஸ் நிலையங்களும், கே.வி.ஆர் நகர் சரத்திற்கு உட்பட்டு தெற்கு, மத்திய போலீஸ் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் இரண்டு போக்குவரத்து போலீஸ் நிலையம், இரண்டு மகளிர் போலீஸ் நிலையம், சைபர் கிரைம் போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம் என பல்வேறு பரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

இதேபோல், மாவட்ட போலீஸ் எல்லையில் அவிநாசி சப்-டிவிசனுக்கு உட்பட்டு அவிநாசி, அவிநாசி மகளிர், அவிநாசி போக்குவரத்து, பெருமாநல்லூர், சேவூர், குன்னத்தூர் காவல் நிலையங்களும், பல்லடம் சப்-டிவிசனுக்கு உட்பட்டு பல்லடம், பல்லடம் மகளிர், போக்குவரத்து, காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம், மங்கலம் காவல்நிலையங்களும், உடுமலை சப்-டிவிசனுக்கு உட்பட்டு உடுமலை, உடுமலை மகளிர், போக்குவரத்து, கொமாரலிங்கம், குடிமங்கலம், கணியூர், அமராவதி, மடத்துக்குளம், தளி காவல் நிலையங்களும், தாராபுரம் சப்-டிவிசனுக்கு உட்பட்டு தாராபுரம், தாராபுரம் மகளிர், போக்குவரத்து, அலங்கியம், குண்டடம், மூலனூர் காவல்நிலைங்களும், காங்கயம் சப்-டிவிசனுக்கு உட்பட்டு காங்கயம், காங்கயம் மகளிர், போக்குவரத்து, ஊதியூர், ஊத்துக்குளி, வெள்ளகோவில் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. மாநகரை போல மாவட்ட காவல் பகுதியிலும் ஏராளமான பிரிவுகளில் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

மாவட்ட பகுதியில் 1,647 போலீசார், மாநகரில் 1,006 போலீசார் என திருப்பூரில் மொத்தம் 2,653 போலீசார் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மாநகரில் சொந்த, வாடகை வீடுகளில் தங்குவோர் மற்றும் வந்து செல்வோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 12,000 லட்சமாக உள்ளது. அதன்படி, பார்த்தால் மாநகரில் 1200 மக்களுக்கு 1 போலீஸ் என்ற கணக்கில் தான் உள்ளது. அப்படி பார்த்தாலும், போலீஸ் பாற்றக்குறை உள்ளது. திருப்பூரில் மாநகரில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பகுதி வாரியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், 1 பகுதிக்கு 2 போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அதேபோல், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி பணியாற்றி வரும் போலீசாருக்கு ரோந்து அலுவல் மட்டுமல்லாமல் பல்வேறு அலுவல் பணிகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால், போலீசார் எந்த வேலை செய்வது என்று தெரியாமல் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள். ரோந்து அலுவலில் இருக்கும் போலீசாரை அதிகாரிகள் வேறு வேலைக்கு பயன்படுத்தும் பொழுது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குற்றங்களை தடுக்கமுடியாமல் போகிறது. இதனால், அதிகாரிகளில் கொடுத்த வேலைகளையும் செய்யமுடியாமல், தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளையும் முறையாக செய்து முடிக்காமல் போலீசார் பெரும் சிக்கலுக்கு ஆளாகின்றார்கள். இது மட்டுமல்லாமல் திமுக தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற உடன் போலீசாருக்கு ஒரு நாள் வார விடுமுறை அறிவித்தது. அறிவித்த சில நாட்கள் மட்டும் போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  

அதன்பின், திருப்பூரில் எந்த போலீஸ் நிலையங்களிலும் முறையாக போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பதில்லை. இதனால், போலீசார் பணியின் மன அழுத்தம் மட்டுமல்லாமல் குடும்ப ரீதியாகவும் நிம்மதி இழந்து போகும் சூழல் உருவாகிறது.இது குறித்து போலீசார் கூறியதாவது: புதிதாக பெறுப்பேற்றுள்ள அரசு, போலீசாருக்கு வாரவிடுமுறை வழங்கியது அனைத்து போலீசாரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த அறிவிப்பை தொடர்ந்து திருப்பூரிலும் போலீசாருக்கு சில நாட்களாக வாரவிடுமுறை அளிக்கப்பட்டது.

முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பாதுகாப்பு பணிக்காக செல்லும் எந்த போலீசாரும் வாரவிடுப்பு எடுப்பதில்லை. இப்படி இருந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வாரவிடுமுறை கொடுப்பதில்லை. வாரவிடுமுறை எடுக்காமல் பணியாற்றும் பொழுது பணிச்சுமை, மற்றும் குடும்ப ரீதியான பிரச்னை என கூடுதல் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். குழந்தைகள், மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சூழலில் கூட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குடும்ப ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, பெண் போலீசார் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை கவனிக்க முடியாமல் போவது என பல சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் போலீசாருக்கு மீண்டும் வாரவிடுமுறை வழங்குவதை உறுதிபடுத்தினால் போலீசார் மன அழுத்தமின்றி பணியாற்ற ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.      இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாநகரில் பணியாற்றும் போலீசாருக்கு தேவையான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, வாரவிடுமுறை அளிப்பது தொடர்பான ஆலோசனைக்கு பிறகு நடைமுறைபடுத்தப்படும் என்றார்.

Related Stories: