கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்

கோவை, ஆக.9: கோவை மண்டல பத்திர பதிவு அலுவலகங்களில் கடந்த 4 மாதத்தில் 963 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டது. 1.70 லட்சம் பத்திரங்கள் பதிவாகின. கோவை பதிவு மண்டலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோபி பகுதிகள் அடங்கியிருக்கிறது. இந்த மாவட்ட எல்லைக்குள் 56 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவல் காலங்களில் பத்திர பதிவு பணிகள் முடங்கியிருந்தது.

தற்போது, மண்டல அளவில் பத்திர பதிவு பணிகள் வேகமாக நடக்கிறது. இதன்மூலம், மண்டல அளவில் பத்திர பதிவு அலுவலகங்களில் வருவாய் வெகுவாக அதிகமாகி வருகிறது. கோவை மண்டலத்தில் கடந்த ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை 1.70 லட்சம் பத்திரங்கள் பதிவானது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 79,327 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது. மண்டல அளவில் நடப்பாண்டில் 3426 கோடி ரூபாய் வருவாய் பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 4 மாதத்தில் 963 கோடி ரூபாய் பத்திர பதிவுகளின் மூலமாக வருவாய் பெறப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 564 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டது.

கடந்த 2 ஆண்டிற்கு முன், அதாவது கொரோனா நோய் பரவல் இல்லாத ஆண்டில் இந்த 4 மாதத்தில் மட்டும் 692 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டது. கொரோனா நோய் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னர், பத்திர பதிவு பணிகள் அதிகரித்ததின் காரணமாக 4 மாதத்தில் மட்டும் 270 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இதுவரை நிலம் அபகரிப்பு, வேறு நபர்களுக்கு பத்திரம் பதிவு செய்தது தொடர்பாக 690 புகார்கள் பெறப்பட்டன. இந்த புகார்களின் மீது விசாரணை நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து நிலம் அபகரிப்பு தொடர்பாக 1696 புகார்கள் பெறப்பட்டிருந்தது.

இதில், பல்வேறு விசாரணைக்கு பின்னர் பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. பத்திரங்களில் இருந்த வில்லங்க விவகார காரணங்களுக்காக 269 பத்திரங்கள் பதிவு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக, கோவை மண்டல பத்திர பதிவு துணை பதிவாளர் சுவாமிநாதன் கூறியதாவது:

கோவை மண்டலத்தில் பத்திர பதிவுகளில் தவறு நடக்காமல் தடுக்க தேவையான கண்காணிப்பு, தணிக்கை ஆய்வு நடக்கிறது. கடந்த காலங்களில் பத்திர பதிவுகளில் நடந்த விதிமுறை மீறல்களை கண்டறிய விரைவில் குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் மூலமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மண்டல அளவில் 17 புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 10 புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் 3 ஆக பிரிக்கப்படும். துடியலூர், காரமடை, வெள்ளலூர், அன்னூர், பொள்ளாச்சி உள்பட பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர, கோவை பத்திர பதிவு அலுவலகங்கள் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்படும். பதிவு பணிகளை வேகமாக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சார் பதிவாளர்கள் பத்திர பதிவின் போது கவனமாக இருக்கவேண்டும். தடங்கல் மனுக்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மோசடியாக பத்திரங்களை பதிவு செய்யக்கூடாது. அப்படி மீறி தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மண்டல அளவில் பதிவுகளுக்கு வரும் பத்திரங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டோக்கன் படி விரைவாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய வருவோர் உரிய நேரத்தில் ஆவணங்களுடன் அலுவலகத்தில் இருந்தால் பதிவு பணிகள் இன்னும் வேகமாக நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: