செஸ் ஒலிம்பியாட் லோகோ தம்பியை 11 ஆயிரம் அரிசியால் ஓவியமாக வரைந்த கோவை மாணவி

கோவை, ஆக.9: தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. கடந்த 28ம் தேதி துவங்கி போட்டி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமாக (லோகோ) குதிரையை மையப்படுத்தி அதற்கு தமிழர் கலாசாரமான வேட்டி, சட்டை அணிந்து, வணக்கம் சொல்வது போல் உருவாக்கப்பட்டது. இதற்கு தம்பி என பெயர் வைக்கப்பட்டது. தம்பி குதிரை சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதனால், உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச அளவில் தம்பி லோகோ பலரை கவர்ந்தது. இந்நிலையில், கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 11 ஆயிரம் அரிசிகளை பயன்படுத்தி தம்பியின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

இது குறித்து ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மதுராந்தகி கூறியதாவது: நான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ வேளாண்மை படித்து வருகிறேன். முதல் முறையாக 5-ம் வகுப்பு படிக்கும் போது கல்வி வளர்ச்சி நாளில் காமராஜர் உருவத்தை வரைந்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து போலியோ, தேர்தல் விழிப்புணர்வுக்காவும், சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தியின் உருவத்தையும் அரிசியில் வரைந்தேன்.

இது போன்ற ஓவியங்களின் மூலம் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளேன். 20 மணி நேரத்தில் 11 ஆயிரம் அரிசியை பயன்படுத்தி தம்பி உருவத்தை வரைந்தேன். இந்த உருவத்தின் பின் பக்கத்தில் செஸ் போர்டு இருக்கும் வகையில் வரைந்துள்ளேன். இந்த ஓவியத்தின் நீளம் 23 அங்குலம், அகலம் 18 அங்குலமாகும்.

இந்த ஓவியத்தில் உள்ள தம்பியின் வேட்டி மற்றும் சட்டையில் உள்ள ஒவ்வொரு அரிசியிலும் 44-வது சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டி என எழுதப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் 8 ஆயிரம் அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வரிடம் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: