×

மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு பணியை புறக்கணித்து போராட்டம்

தஞ்சாவூர், ஆக.9: மின்சார சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்வதை கண்டித்து மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தஞ்சாவூரில் நேற்று பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மின்விநியோகம் தனியாருக்கு விடுவதற்கும், ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மின்சார சட்ட திருத்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழ்நாடு மின்வாரியத்தில் செயல்படுகின்ற அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தஞ்சை திட்ட மின்வாரிய அலுவலகங்களில் செயல்படுகின்ற அனைத்து பணியாளர்களும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வேண்டுகோளை ஏற்று பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியூ சங்க மாநில துணைத்தலைவர் ராஜாராமன், மாவட்ட செயலாளர் காணிக்கைராஜ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலாளர் ராகவன், பொறியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தரராஜ், மாவட்ட செயலாளர் சுந்தர், பொறியாளர் கழக மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பால.வெங்கடேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், ஜனதா தொழிலாளர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், எம்பிளாயீஸ் ஃபெடரேசன் மாவட்ட செயலாளர் ராஜா, ஏ.இ.எஸ்.யூ சங்க மாவட்ட செயலாளர் சுந்தர், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், சிஐடியூ முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், ஓய்வுபெற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் அப்பர்சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

பட்டுக்கோட்டை:    பட்டுக்கோட்டையில் பாளையம் பகுதியில் உள்ள மின்சாரவாரிய செயற்பொறியாளர்  அலுவலகம் முன்பு நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும்  கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் கும்பகோணம், பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மின் ஊழியர்கள் மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...