கரூர் கலெக்டர் அலுவலகம் முன் செல்லாண்டிபாளையம் மக்கள் தர்ணா

கரூர், ஆக. 9: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கரூர் மாவட்டம் ப.செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் சிலர், கலெக்டர் அலுவலகம் வந்து நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி தேவராஜ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 3ம்தேதி அன்று பைக்கில் வந்த சிலர், தங்கள் பகுதியில் வசிக்கும் சிலரை தாக்கி விட்டு சென்று விட்டனர். அது குறித்து வழக்கு பதிந்து ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார்களிடம் தெரிவித்தனர். மேலும், இந்த பகுதியில் செயல்படும் சந்து கடையின் காரணமாகவும் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஒரு மணி நேரம் கரூர் கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: