உறையூர் கோணக்கரையில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

தில்லைநகர், ஆக.8: திருச்சி உறையூர் கோணக்கரையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு இன்றுமுதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சி உறையூர் கோணக்கரை சாலையில் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக புத்தூர் மற்றும் உறையூர் பகுதிக்குட்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்பட வேண்டிய தெருக்களுக்கு குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. குடிநீர் உடைப்பு ஏற்பட்டவுடன் திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு இரவு பகல் பாராது பணியாற்றி உடைப்பை சரி செய்து நேற்று பிற்பகலில் பணிகள் முடிவுற்றது. காவிரி ஆற்றில் இருந்து பம்பிங் ஸ்டேஷன் மூலம் தண்ணீர் மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் திறக்கும் பணி பிற்பகலுக்குப் பிறகு தொடங்கியது. இன்று (திங்கள்கிழமை) காலை முதல் படிப்படியாக குடிநீர் வழங்கும் பணி இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: