போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதாரதுறை இணைந்து பணியாற்ற வேண்டும்

கரூர், ஆக. 8: போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து பணியாற்ற வேண்டும் என கரூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருள் ஒழிப்பு குழு அமைத்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் 8ம்தேதி பள்ளி மாணவர்களை கொண்டு பேரணி நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுப் போட்டி, கட்டுரை, ஒவியப் போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புத்தக திருவிழாவில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்டால் அமைக்க வேண்டும். வரும் சுதந்திர தின விழாவில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதார துறை இணைந்து பணியாற்ற வேண்டும். பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் கரூர் அரசு கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கத்தில் வரும் ஆகஸ்ட் 12ம்தேதி விழிப்புணர்வு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆகஸ்ட் 17ம்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், காவல்துறை, சுகாதாரத்துறை இணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த விலை மற்றும் சில்லரை மருந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு உரிமையாளர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக அறிவுரை வழங்குவது தொடர்பாக கரூர் அரசு கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் ஆகஸ்ட் 11ம்தேதி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கோட்டாட்சியர்கள் புஷ்பாதேவி, ரூபினா, மாவட்ட குற்றவியல் மேலாளர் சந்திரசேகர் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: