×

சுதந்திர தின மாரத்தான் போட்டிகள்

மதுரை, ஆக.8: சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மதுரையில் நேற்று 10, 5 மற்றும் 3 கி.மீ. தூரத்தில் மாரத்தான் போட்டிகள் நடந்தன.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சவுராஷ்டிரா இளைய தலைமுறை தொழில் முனைவோர் அமைப்பு சார்பில் மதுரையில் நேற்று மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. 10 கி.மீ, 5 கி.மீ மற்றும் 3 கி.மீ தூரம் என மூன்று வகையான மாரத்தான் போட்டிகள் நடந்தன. இந்த 3 வகையான மாரத்தான்களும் காந்தி மியூசியத்திலிருந்து துவங்கி காந்தி மியூசியத்திலேயே நிறைவடையும் வகையில் பயணப்பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.10 கி.மீ. தூரத்திற்கான மாரத்தானை கலெக்டர் அனீஷ்சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான், காந்தி மியூசியத்திலிருந்து, அண்ணா பஸ் நிலையம், அரவிந்த் மருத்துவமனை, அம்பிகா கல்லூரி, சுகுணா ஸ்டோர், சுந்தரம் பார்க் வழியாக சென்ட்ரல் மார்க்கெட் வந்து, அங்கிருந்து திரும்பி கே.கே.நகர் ஆர்ச், ராஜா முத்தையா மன்றம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ரைபிள் கிளப், அழகர்கோவில் ரோடு, மாநகராட்சி, தமுக்கம் சந்திப்பு வழியாக காந்திமியூசியம் வந்தடைந்தது.
இதேபோல், 5 கி.மீ. மாரத்தானை சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குமரன் ஜகுவாவும், 3 கி.மீ. மாரத்தானை மகாலெட்சுமி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்து துவக்கி வைத்தனர். இந்த 3 மாரத்தான்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சவுராஷ்டிரா இளைய தலைமுறை தொழில் முனைவோர் அமைப்பின் தலைவர் குபேஷ்பாவு, செயலாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். மாரத்தானில் சென்றவர்கள் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச்சென்றனர்.

Tags : Independence Day Marathon ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு