ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கு வசதியாக உபகரணங்களை பராமரிக்க கோரிக்கை

பொள்ளாச்சி,ஆக.8:பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 175க்கும் மேற்பட்ட ஒன்றிய பள்ளிகள் செயல்படுகிறது. இதில், பல துவக்க பள்ளிகளில் மாணவ, மாணவிகள் விளையாடுவதற்கு என சறுக்கு, ஊஞ்சல், சீஷா(ஏற்ற இறக்க உபகரணங்கள்) ஏற்படுத்தப்பட்டன. பள்ளி இடைவேளையின்போது மாணவர்கள் இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடி வந்தனர். ஆனால், பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், மாணவர்கள் விளையாட பயன்படுத்தும்  விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதுடன், அதனை முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடபட்டது. அதிலும், சில உபகரணங்கள் மாயமானது.

ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசதிக்காக, போதிய விளையாட்டு உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தந்த கிராம பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பள்ளிகளில் மட்டும் விளையாட்டு உபகரணங்களை பராமரிப்பு செய்ததுடன், புதிதாக உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டது. எனவே, அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், மாணவர்கள் விளையாட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: