தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம்

தர்மபுரி, ஆக.8:  தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகின்றன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறும் நிலையில் பருத்தி தட்டுப்பாடு, நூல்விலை உயர்வால் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தர்மபுரியில் அமைக்கப்படும் சிப்காட்டில் சிறு, குறு விசைத்தறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 50  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ேவலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, ஏமகுட்டியூர், தேவரசம்பட்டி, லளிகம், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, எர்ரப்பட்டி, சவுளூர், பாளையம்புதூர், பாப்பாரப்பட்டி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. வீடுகளிலும், தனி கூடாரத்திலும் தறி போட்டுள்ளனர். இதன்மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேஷ்டி, துண்டு மற்றும் காடா துணிகள் மற்றும் காட்டன் சர்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வேஷ்டி, துண்டுகள் ஈரோடு, சேலம் மாவட்டத்திற்கு செல்கிறது. தினசரி 75 ஆயிரம் முதல் 1 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை பாகலூர், ஓசூர், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், தளி மற்றும் பல்வேறு இடங்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இங்கு தறி கூடாரம் அதிகம். பட்டுநூல், காட்டன் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து பெங்களூரு சந்தைக்கு துணிகள் கொண்டு செல்லப்படுகிறது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஜிஎஸ்டி, பஞ்சு, பருத்தி விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தற்போது விசைத்தறித் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக, இந்த தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சாமிநாதன் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இதன்மூலம் பல கோடிக்கு வணிகம் நடக்கிறது.

சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் இத்தொழில் முடங்கியது. தற்போது, மீண்டும் உயிர்பெற்று விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சமீபகாலமாக விசைத்தறி தொழில் பல்வேறு காரணங்களால் நசியும் நிலையில் உள்ளது. உற்பத்தி செய்யப்படும் பருத்திகளை உள்ளூர் தேவைக்கே பயன்படுத்த வேண்டும். ஏற்றுமதி செய்யக்கூடாது. தற்போது, நூல் விலை உயர்ந்திருப்பதால், விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாகப் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி பிரச்னை, பஞ்சு, பருத்தி விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பருத்தி நூல்களை அரசே கொள்முதல் செய்யும் வகையில் அரசு நூல் கூடம் அமைக்க வேண்டும். தர்மபுரியில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட்டில் சிறு, குறு விசைத்தறி கூடார உரிமையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி, அவர்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும். இதன் மூலம் இத்தொழிலை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: