குளிக்க தடை நீடிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பென்னாகரம், ஆக.8:  ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. இதனால், நேற்று காலை சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி பிற்பகல், ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 2.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி, தமிழக -கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர், ஒகேனக்கல் நோக்கி பெருக்கெடுத்து வந்தது. அதேவேளையில், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் சோதனைச்சாவடியில், போலீசார் தடுத்து நிறுத்தி ஒகேனக்கல் செல்ல அனுமதி இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால், சுற்றுலா வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள், சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி விட்டு பேருந்து மூலமாக ஒகேனக்கல் வந்தனர். அவர்கள் பரிசல் சவாரி செய்ய முடியாமலும், அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: