அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ

அண்ணாநகர்: அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 4 தளங்கள் கொண்ட 8 கட்டிடங்கள் உள்ளன. இதில், 40க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 4வது தளத்தில் உள்ள வீட்டில் ஈஷா, உமேமத் ஆகியோர் தங்களின் மகள், பேரன், பேத்தி ஆகியோருடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இவர்கள் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. உடனடியாக தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ வேகமாக பரவி வீடுமுழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அனைவரும் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.தகவலறிந்து அண்ணாநகர், ஜே.ஜே.நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: