கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையில் 98 மிமீ மழை பதிவு

கோவை, ஆக.6: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆழியாறு, சோலையாறு, சிறுவாணி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாகன ஓட்டிகளை வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு ஓட்டினர். குறிப்பாக, ராமநாதபுரம், சுந்தராபுரம், மதுக்கரை பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.

மேலும், நகரின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் தற்போது வரை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழையின் சராசரி மழையளவான 210 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு குறைவு என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாவட்டத்தில் 117.6மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 631மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், மேட்டுப்பாளையத்தில் 41.60மி.மீ, சின்கோனா 70மி.மீ, சின்னகல்லார் 142மி.மீ, வால்பாறை 122மி.மீ, வால்பாறை தாலுகா 121மி.மீ, சோலையார் 86மி.மீ, ஆழியார் 42மி.மீ, பொள்ளாச்சி 6மி.மீ, வேளாண் பல்கலைக்கழகம் 0.60மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: