×

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா,  கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் சிறுகடைகள் ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இந்த நிலையில், மாநகராட்சி சார்பில்  சாலை ஓரம் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடைகளை அகற்றாத காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் நகர ஊரமைப்பு அலுவலர் ஜெயந்தி தலைமையில் வருவாய் அலுவலர் தமிழரசன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்றினர். அப்போது, அகற்ற வந்த அதிகாரிகளுடன் சில கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Kanchipuram ,Kamatshi ,Amman Koil ,Mada Veedi ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...