×

தேங்கி நிற்கும் மழைநீரால் விளை நிலங்கள் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு, ஆக. 6: விருத்தாசலம்-புவனகிரி சாலையோரம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் அரசு ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே மழைநீர் தேங்கி நிற்பதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விருத்தாசலம்-புவனகிரி சாலை செல்கிறது. இந்த சாலையை கடந்துதான் புதிய விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை மேம்பாலமும் செல்கிறது.

இச்சாலை பணியை மேற்கொண்டுவரும் நகாய் திட்ட அதிகாரிகள் முறையான மழைநீர் வடிகால் அமைக்காததால் வடகிழக்கு பருவ மழையின்போது எறும்பூர், நெல்லிக்கொல்லை, துரிஞ்சிக்கொல்லை கிராம பகுதிகளில் உள்ள விளை நிலங்களிலிருந்து வெளியேறும் மழைநீர் விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை அமைவதற்கு முன் கரைபுரண்டு வடிகால் வாய்க்கால் வழியாக

 குறுக்கு ரோடு வடக்கு ராஜன் வாய்க்காலில் தடையின்றி வடிகாலாகி வந்தது. ஆனால் விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர்  சாலை விரிவாக்க பணியை மேற்கொண்டு வரும் நகாய் திட்ட அதிகாரிகள் கனமழை காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேறுவது எப்படி என்பதை கருத்தில் கொள்ளாமல் உயர்மட்ட பாலம் அமைத்து சாலையின் உயரத்தை அதிகரித்து அமைத்துவிட்டனர்.

இதனால் மழைநீர் தேங்கி 500 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழைக்காலங்களில் அதிக அளவில் தேங்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Arable ,
× RELATED பருவமழை பொய்த்தது தா.பழூர் பகுதி கிராமங்களில் வெறிச்சோடிய விளை நிலங்கள்