அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவு

சேலம், ஆக.6: சேலம் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளால், அனைத்து ரேஷன் கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் மழை, வெள்ளம் மற்றும் புயல் சேதாரங்களில் இருந்து ரேஷன் கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள்  சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் செய்ய பணியாளர்கள், அதிகாரிகளுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்புக்கு உட்படும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாத நிலையில், ரேஷன் கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் வெள்ளத்தால் சேதம் அடையாதவாறு மரம் அல்லது செங்கற்களால் ஆன உயரமான மேடையில் வைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

இது தொடர்பாக பொதுவிநியோக திட்ட அலுவலர்களுக்கும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களை நகர்வு செய்து பாதுகாப்பாக சேமித்து வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் நுகர்வு மற்றும் விநியோகத்தை அன்றாடம் கண்காணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் ரேஷன் கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

எளிதில் அணுகமுடியாத பகுதிகள், பருவமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பாதிப்பு, நீர்தேங்கும் அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அளவு உணவுப்பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் கிடங்குகளில் எந்தவொரு கிடங்கிலேனும் அத்தியாவசிய பொருள்கள் இருப்பு குறைவாகவோ இல்லாமலோ இருப்பின்அதை சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், கலெக்டர், வாணிப கழக மேலாண்மை இயக்குனரின் கவனத்துக்கு உடன் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரிசி, மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி அவசர கால விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். இயற்கை பேரிடர் காரணமாக ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள அதிகப்படியான மண்ணெண்ணெய் இருப்பு ைவத்து கொள்ள ஏதுவாக தேவையான பேரல்கள் வைத்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்து நுகர்வுக்கு ஏற்றதாக இல்லாத போது உனடியாக அப்புறப்படுத்தி விட்டு நல்ல பொருட்களை கடைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மழையால் நனைந்த அரிசி, சர்க்கரை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு புகார் ஏதேனும் வரபெறின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இந்த உத்தரவின் பேரில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன்கடைகளில் சிறிய அளவில் பழுதடைந்த தரைப்பகுதி, சுவர் மற்றும் கூரைப்பகுதிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஒரு சில ரேஷன் கடைகளில் தரைப்பகுதி ஈரமாகி அதனால் பொருட்களுக்கு சேதமடைய வாய்ப்புள்ளது என கருதினால் அந்த ரேஷன் கடைகளில் மரக்கட்டைகளின் மீது பொருட்களை இறக்கி பாதுகாக்க வேண்டும். மலைப்பகுதி ஆறு மற்றும் ஓடை போன்ற பகுதிகளில் மழை, வெள்ளத்தால் ஏற்படும் அசாதாரண சூழல் உருவாகும் முன்னர் தேவையான அத்தியாவசிய பொருட்களை நகர்வு செய்து பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுவிநியோக திட்ட அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் ரேஷன் கடைகள் குறித்து உடனே தகவல் அளிக்க வேண்டும். தேவையான பொருட்களை இருப்பு வைத்து கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: