×

2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக.6: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்ள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது.

குறிப்பாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 1042 கனஅடியாக இருந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 2209 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 42.64 அடியில் 42.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் 2020 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கே.ஆர்.பி அணைக்கு வருகிறது. இதேபோல், வேப்பனஹள்ளி அருகே கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரும், கே.ஆர்.பி அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 6300 கனஅடி வந்துக் கொண்டிருந்த தண்ணீர், நேற்று காலை 5735 கனஅடியாகவும், பிற்பகலில் 4760 கனஅடியாக சரிந்தது. இதனால் அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 7549 கனஅடியில் இருந்து 5100 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், அணையின் மொத்த உயரமான 52 அடியில் 49.40 அடிக்கு தண்ணீர் உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இரவில் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அணையின் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு