கர்நாடகாவில் இருந்து ஆம்னி பஸ்சில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது

சென்னை: கர்நாடகாவில் இருந்து ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் குட்கா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் நட்சத்திர ஓட்டல் ஒன்றின் அருகே நேற்று முன்தினம் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஓட்டல் அருகே வந்து நின்ற ஆம்னி பேருந்தில் இருந்து 3 நபர்கள் பார்சல்களை லோடு வாகனத்தில் ஏற்றினர்.

இதை கவனித்த போலீசார், அந்த பார்சல்களை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசு தடைசெய்த குட்கா பொருட்கள் இருந்தது  தெரியவந்தது.

உடனே போலீசார் குட்கா பொருட்களை ஆம்னி பேருந்தில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றிய மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (57), கர்நாடகா மாநிலம் சித்ரா துர்கா மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா (35), பாபு (35) ஆகியோரை போலீசார் ைகது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி பேருந்து, சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: