×

ஆடித்திருவிழாவை முன்னிட்டு பாண்டி முனியய்யா கோயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள் இன்று 70 கிடா வெட்டி அன்னதானம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சிவகங்கை சாலையில் உள்ள பாண்டி முனியய்யா கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சௌமியநாராயணபுரம் பகுதி சிவகங்கை சாலையில் உள்ள பாண்டி முனியய்யா கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குட விழாவை முன்னிட்டு ஆடி 1ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பாண்டிமுனியய்யா கோவில் வந்து சேர்ந்தனர். பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் பாண்டி முனியய்யா குடியிருப்பதாக வழிபடும் ஆலமரத்திற்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பால் மற்றும் திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பூத்தட்டு எடுத்து வந்து பாண்டி முனியய்யாவுககு பூச்சொரிந்து வழிபட்டனர். விழாவில் காட்டாம்பூர், தேவரம்பூர், சௌமிய நாராயணபுரம், கல்லுவெட்டுமேடு, குறிஞ்சி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இன்று கோவிலில் 70க்கும் மேற்பட்ட ஆட்டுகிடா வெட்டி அன்னதானம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை பாண்டி முனியய்யா கோவில் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Pandi Muniyaya ,Adithiru festival ,
× RELATED இடைப்பாடி மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா