×

சங்கராபுரத்தில் போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி நகராட்சியின் எல்லையை ஒட்டி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்குள்ள பாண்டியன் நகர், வீட்டு வசதி வாரியம், வி.ஏ.ஓ காலனி, போக்குவரத்து நகர், என்.ஜி.ஜி.ஓ காலனி, கம்பன் நகர், டிப்பார்மெண்ட் டிரைவர்ஸ் காலனி, ஓ.ஏ.காலனி, முன்னாள் படைவீரர் காலனி, தாசில்தார் நகர், கே.கே நகர், மாருதி நகர், அருணா நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விஸ்தரிப்பு பகுதியாக உள்ளதால் வழிப்பறி மற்றும் வீட்டை உடைத்து திருட்டு, டூவீலர் திருட்டு அதிக அளவில் நடக்கிறது. இப்பகுதியில் நடக்கும் திருட்டு, விபத்து உள்பட அனைத்து சம்பவங்களுக்கும் 15 கி.மீ தொலைவில் உள்ள குன்றக்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக கண்டுகொள்ளப்படாத நிலையே உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு சங்கராபுரத்துக்கு என தனியாக போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சமூகஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், ஊராட்சி பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். குற்ற நிகழ்வுகள், விபத்துகள் ஏற்பட்டால் அதிக தூரம் உள்ள குன்றக்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு செல்ல வேண்டியது உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. நான்கு வழிச்சாலைக்கு அருகே உள்ளதால், பல்வேறு குற்றச்சம்பங்கள் நடக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அரசினர் மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளன. அதிகஅளவில் பணம் பரிவர்த்தனை நடக்கும் பத்திரப்பதிவு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தவிர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்டுமான பணிகள் நடந்துவருகிறது. எனவே வளர்ந்து வரும் இப்பகுதியில் குற்றச்சம்பங்களை தடுக்க போலீஸ் ஸ்டேசன் அமைக்க வேண்டும் என்றார்.

Tags : Shankarapuram ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்