சாலை சீரமைப்பின் போது ஜேசிபி மீது மரம் விழுந்ததால் பரபரப்பு

ஊட்டி: ஊட்டி  அருகே சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற  பகுதிகளில் நேற்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால்,  அனைத்து சாலைகளிலும் மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர்  சாலைகளில் ஓடியது. இதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும்  நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி வாகனங்களை கொண்டு தூர் வாரும் பணிகள்  மற்றும் மண் சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,  ஊட்டியில் இருந்து முத்தோரை பாலாடா செல்லும் சாலையில் முள்ளிக்கொரை  பகுதியில் ஒரு ஜேசிபி வாகனம் சாலையோரங்களில் மழை நீர் கால்வாய் தூர்  வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகே அதிகாரிகள் மற்றும்  ஊழியர்களும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சாலையோரத்தில்  இருந்த மரம் ஒன்று சாய்ந்து ஜேசிபி வாகனம் மீது விழுந்தது.
 அதிர்ஷ்டவசமாக  ஜேசிபி ஆபரேட்டர் மற்றும் அங்கு பணியில் இருந்த நெடுஞ்சாலைத்துறை  ஊழியர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஜேசிபி மீது மரம்  விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இவ்வழித்தடத்தில்  போக்குவரத்தும் தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அந்த மரத்தை  உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Related Stories: