தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு:  பருவ மழை  தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தினமும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை முதல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன, தொடர்ந்து, சுமார் 8.30 மணியளவில் ஈரோடு நகரில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மதியம் சுமார் 11.30 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.  காலையிலேயே பெய்யத் தொடங்கிவிட்ட இந்த மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் சுமார் அரை மணி நேரம் ஈரோடு மற்றும்  புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, சாரல் மழை பெய்தது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள 11 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. உடனடியாக அந்த வீடுகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தண்ணீரால் சூழப்பட்டு பாதிப்பு அடைந்த பொதுமக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் காவிரிக்கரையில் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 11 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதி, மருத்துவ வசதி உடனடியாக செய்யவும், அவர்கள் பாதுகாப்பு கருதி கருங்கல்பாளையம் மகளிர் பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார்.

Related Stories: