கோத்தகிரி அருகே கலெக்டர் உத்தரவை மீறி இயங்கிய பாஜ நிர்வாகி பள்ளி

ஊட்டி,  ஆக.4:  மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்ட நிலையில், உத்தரவை மீறி கோத்தகிரியில் தனியார் பள்ளி  செயல்பட்டதால் பெற்றோர் அதிருப்தியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில்  வளிமண்டல சுழற்சி காரணமாக அதிகனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம்  எச்சரித்திருந்தது. இதனை தொடர்ந்து  மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு  கருதி நேற்று (3ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து  உத்தரவிட்டது. நேற்று முன்தினம் மாலையே அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி,  கல்லூரிகள் செயல்படவில்லை. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்ட சிறிது நேரத்தில் கோத்தகிரி அருகே  கீழ்கோத்தகிரி பகுதிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார்  பள்ளியில் இருந்து மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி  வந்துள்ளது. இதில், இன்று (3ம் தேதி) பள்ளி வழக்கம் போல்  செயல்படும் என்றும், மதிய உணவு பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று பள்ளி  செயல்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளது.  அதன்பேரில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளிக்கு நேரில்  ஆய்வுக்காக வரும் தகவல் தெரிந்து, பள்ளி நிர்வாகம், மாணவர்களை அவசர கதியில்  வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின் பள்ளி மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இந்த பள்ளி  கோத்தகிரியை சேர்ந்த பாஜ., பிரமுகர் ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: