மாவட்டத்தில் மழை பாதிப்பு மீட்பு பணிக்கு 3500 மீட்பாளர்கள் தயார்

ஊட்டி, ஆக.4:  நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள 3500 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் பெய்யும் தென்மேற்கு பருவமழையால் கூடலூர், குந்தா, ஊட்டி  உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படும். சில சமயங்களில் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களின் மீது மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும். அதேபோல், கூடலூர் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இம்முறை தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் துவங்கியது. கூடலூர், குந்தா, ஊட்டி போன்ற பகுதிகளில் சில நாட்கள் கொட்டி தீர்த்தது. இதில், கூடலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல், ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சில இடங்களில் வாகனங்களின் மீது மரங்கள் விழுந்து விபத்தும் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மாவட்டம் உட்பட மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் நேற்றும், இன்றும் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பாதிப்புக்களை சரி செய்ய மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர். மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டுள்ளனர். மேலும், மழை பாதிப்புக்களை உடனுக்குடன் சீரமைக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து துறைகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தால், உடனுக்குடன் சீர் செய்வது, மீட்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நடந்தது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் அம்ரித், கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், மாவட்டத்தில் கன மழை பெய்தால், சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் இருக்கமாறு அமைச்சர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, மழை பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக ஆனந்த்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்பணிகளை கண்காணிப்பார். கடந்த மாதம்  பெய்த மழையால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. எனினும், நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 44 பேர், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் 34 பேர் வந்துள்ளனர். இவர்கள் குந்தா மற்றும் கூடலூர் பகுதிகளிலும் முகாமிட்டுள்ளனர். இது தவிர,  3500 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு முறையாக பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஏற்பட்டால், இவர்கள் மீட்டு பணிகளில் ஈடுபடுவார்கள்.  மேலும், பொதுமக்களை தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன. இதுவரை அபாயகரமான 353 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 308 மரங்கள் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் அபாயகரமான மரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி,  மாவட்ட வன அலுவலர் சச்சின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயராமன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: