×

ராமநாதபுரம் அருகே கோயிலுக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராமமக்கள் மனு

ராமநாதபுரம், ஆக.4: ராமநாதபுரம் அருகே தெற்குதரவை அய்யனார் கோயிலுக்கு வைத்த சீலை அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக தெற்குதரவை கிராம தலைவர் ராமன் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் அளித்த மனு: தெற்குதரவை கிராமத்தில் 120 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். இங்குள்ள அய்யனார் கோயிலில் தொன்று தொட்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறோம். இக்கோயில் நிர்வாகி இறந்ததையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரை நிர்வாகியாக கிராம பொதுமக்கள் ஒப்புதலுடன் ஏப்.15ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின், எங்கள் ஒப்புதலுடன் கோயிலை நிர்வகித்த நபர் எங்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. கோயிலின் வெளி கதவு பூட்டை பூட்டி இடையூறு செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மே 30ம் தேதி ராமநாதபுரம் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்தோம்.

இது தொடர்பாக, ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 4ம் தேதி சமரச கூட்டம் நடந்தது. இதில் எங்கள் ஒப்புதலுடன் கோயிலை நிர்வகித்த நபர் பங்கேற்கவில்லை. இதைதொடர்ந்து, அந்நபர் ராமநாதபுரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தார். இதன் பின், நடந்த சமாதான கூட்டத்தில், எவ்வித முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து கோட்டாட்சியர் உத்தரவுபடி கோயிலுக்கு சீலிட்டு பூட்டப்பட்டது. இந்நிலையில், தெற்குதரவை மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா செப்.6ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அய்யனார் கோயில் வளாகத்தில் அம்மன் கரகம் கட்டி திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது அய்யனார் கோயில் சீல் வைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர். முளைப்பாரி விழாவையொட்டி அம்மன் கரகம் கட்ட அய்யனார் கோயிலுக்கு வைத்த சீலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். கிராமத் தலைவர் ராமன், சாத்தையா, கதிரேசன் உள்ளிட்டோர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்தனர். கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியரிடம் கலந்தாலோசித்து மீண்டும் சமரச கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

Tags : Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...