மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்

திருபுவனை, ஆக. 4:  கண்டமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது மாற்றுத்திறனாளி பெண் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவு 11.30 மணி அளவில் அந்தப்பெண் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசித்து வரும் பக்கிரி மகன் பிரபு (36) என்பவர் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அந்தப்பெண் சத்தம் போட்டதும் பிரபு தப்பியோடிவிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரை போலீசார் கைது செய்யவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மதகடிப்பட்டு -மடுகரை சாலையில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, வழக்குப்பதிந்து 5 நாட்களாகியும் இதுவரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, விரைவில் பிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக மதகடிப்பட்டு மடுகரை சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தேடிவரும் பிரபுவுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: