பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்; லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக, லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மணல்  லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார். மேலும், ஏராளமான லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து லாரி உரிமையாளர்கள் பங்கேற்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து, வரும்  18ம் தேதி முதல் நடைபெற உள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளை இயக்காமல் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு முதல்கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

அதிக பாரத்தை ஏற்ற மாட்டோம், அதிக பாரத்தை ஏற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கனிமவள அதிகாரிகள், அமைச்சர் என அனைவரையும் சந்தித்தேன். ஆனால், யாருமே இதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்.  இவ்வாறு அதிகபாரம் ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களுக்கு அரசு அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். அதிக பாரத்துடன் வாகனங்களை ஓட்டக்கூடாது என நினைப்பவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தற்போது வந்துள்ளது’ என தெரிவித்தார்.

Related Stories: